கொத்துத்தாலி(பெருந்தாலி) மறவர்களான ஊர்காடு சேதுராயர்கள்
பொதிகை மலைக்கு வந்த அகத்தியப் பெருமான், தாமிரபரணிக் கரையில் பல இடங்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். ஊர்க்காட்டுக்கும் வந்த அவர் தாமிரபரணி ஆற்றுமணலை பிடித்து லிங்கம் உருவாக்கினார்.
ஆனால் மணல் சரிந்தது. பல முயற்சிகளுக்குப் பிறகும் இப்படி நிகழவே, கோபம்கொண்ட அகத்தியர், “சிவனே, உனக்கு என்ன கோட்டியா (புத்தி ஸ்வாதீனம் இல்லையா)?’’ என்று கேட்டார். பிறகு மீண்டும் பிடித்தார். அதன் பிறகு லிங்கம் நின்றது. ஈசனும், கோட்டியப்பர், கோட்டீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். இவ்வாறு அகத்தியர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை மூலமாக வைத்துதான் பிற்காலத்தில் ஆலயத்தை நிர்மாணித்திருக்கிறார்கள்.
![]() |
| பழமைவாய்ந்த கோட்டியாப்பர் கோவில் |
இவ்வாலயத்தில் பல திருப்பணிகளை செய்துள்ளார். ஊர்க்காடு சமஸ்தானத்தை கடைசியாக ஆண்ட மன்னர் கோட்டிலிங்க சேதுராயர். இவரை மீனாட்சி சுந்தர விநாயக விசாக பெருமாள் என்றழைக்கிறார்கள்.
இவரது வாரிசு எல்.கே. சுப்புலெட்சுமி நாச்சியார் பட்டங்கட்டிய கடைசி ஜமீன்தாரிணியாக வாழ்ந்துள்ளார். ஊர்க்காட்டில் பட்டத்து அரண்மனை, கோயில் அரண்மனை, பூஜை அரண்மனை உள்பட ஐந்து அரண்மனைகள் இருந்தன. இவற்றில் கோயில் அரண்மனை மட்டுமே தற்போது உள்ளது.
பட்டத்து அரண்மனையை ‘மரகத மாளிகை’ என்றும் அழைத்தார்கள். பெயரை போலவே இந்த அரண்மனை மரகதமாய் ஒரு காலத்தில் ஜொலித்திருக்கிறது.
அரண்மனைக்குள் நாட்டிய மண்டபம் உள்ளது. இதன் படிகள் மரத்தாலானவை. ஒவ்வொரு படியிலும் மணிகள் கட்டி தொங்கவிடப் பட்டிருக்குமாம். நாட்டியப் பெண்கள் மேடைக்குச் செல்ல படிகள் ஏறும்போது, அப்போதே சலங்கை ஒலிக்குமாம்! கோயில் அரண்மனை சிவன் கோயில் முன்பு உள்ளது. இந்த அரண்மனை உப்பரிகையில் நின்றுதான் கோயில் விழாக்கள் மற்றும் தேரோட்டத்தை ராணி பார்ப்பார்.
பிற்காலத்தில் இந்த சிவன் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியவர் நெல்லில் முத்து வேய்ந்த சேதுராயர். கோயிலுக்குள் இடதுபுறம் கல்தூணில் அவர் ஒரு சிலையாக சிவனை வணங்கியபடி காட்சியளிக்கிறார். ஆனால் கை ஒடிந்த சிலையாக அது இருக்கிறது. ஏன்?
நெல்லில் முத்து வேய்ந்த சேதுராயர் வயதான காலத்தில் மிகவும் நோயுற்றார். இனி அவரை காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் கைவிட்டுவிட்டனர். ஆனாலும் இவரது உயிர் பிரியவில்லை. உணர்வற்றிருந்தார்.
பல புண்ணியங்களைச் செய்தவர் என்பதால் உயிர் பிரிய மறுக்கிறதோ? பிரபல ஜோதிடரை வரவழைத்து கேட்டனர். ஜோதிடர் கோட்டியப்பர் ஆலயம் சென்று சிவனை வணங்கினார். அங்கிருந்த கோயில் தூணில் சேதுராயர் சிவபெருமானை வணங்கும் தோற்றத்தில் சிலை அமைந்திருந்தது. சிவனை வணங்கும் அவருக்கு எப்படி சாவு வரும்? ‘கும்பிட்ட நிலையில் இருக்கும் சேதுராயரின் கையை உடையுங்கள்,’ என்றார் ஜோதிடர்.அதன்படி சிலையின் கையை உடைத்தனர்; அவர் உயிர் பிரிந்தது. சிலை வடிவானாலும் ஈசனை வணங்கியபடி இருந்ததால் சேதுராயரின் உயிரைத் தக்கவைத்திருந்தார் ஈசன்! இதனால் கோட்டீஸ்வரர் மீது ஜமீன் குடும்பத்துக்கு மிக அதிகமான பற்று வந்தது. அதன்பின் சிவனை வணங்காமல் அவர்கள் எந்த செயலையும் மேற்கொள்வதில்லை. ஊர் மக்களும் தங்கள் குழந்தைகளுக்கு கோட்டியப்பர், கோடீஸ்வரர் என்று பெயர் வைத்து அழகு பார்த்தனர். ஜமீன்தார் வீட்டிலும் மூத்த குழந்தைக்கு கோட்டியப்பர் என்ற பெயர் விளங்கியது.
பல புண்ணியங்களைச் செய்தவர் என்பதால் உயிர் பிரிய மறுக்கிறதோ? பிரபல ஜோதிடரை வரவழைத்து கேட்டனர். ஜோதிடர் கோட்டியப்பர் ஆலயம் சென்று சிவனை வணங்கினார். அங்கிருந்த கோயில் தூணில் சேதுராயர் சிவபெருமானை வணங்கும் தோற்றத்தில் சிலை அமைந்திருந்தது. சிவனை வணங்கும் அவருக்கு எப்படி சாவு வரும்? ‘கும்பிட்ட நிலையில் இருக்கும் சேதுராயரின் கையை உடையுங்கள்,’ என்றார் ஜோதிடர்.அதன்படி சிலையின் கையை உடைத்தனர்; அவர் உயிர் பிரிந்தது. சிலை வடிவானாலும் ஈசனை வணங்கியபடி இருந்ததால் சேதுராயரின் உயிரைத் தக்கவைத்திருந்தார் ஈசன்! இதனால் கோட்டீஸ்வரர் மீது ஜமீன் குடும்பத்துக்கு மிக அதிகமான பற்று வந்தது. அதன்பின் சிவனை வணங்காமல் அவர்கள் எந்த செயலையும் மேற்கொள்வதில்லை. ஊர் மக்களும் தங்கள் குழந்தைகளுக்கு கோட்டியப்பர், கோடீஸ்வரர் என்று பெயர் வைத்து அழகு பார்த்தனர். ஜமீன்தார் வீட்டிலும் மூத்த குழந்தைக்கு கோட்டியப்பர் என்ற பெயர் விளங்கியது.
பின்னால் வந்த பூஜாதுரை என்ற சிவனனந்த பெருமாள் சேதுராயர், கோடீஸ்வரர் ஆலயத்துக்கு ஏராளமான நிலங்களை தானமாக கொடுத்துள்ளார். கவிஞர்களுக்கு பரிசுகளை வாரி வழங்கியுள்ளார். வழிப்போக்கர்கள் தங்கிச் செல்ல சத்திரங்கள் அமைத்துள்ளார். இன்றும் ஊர்க்காடு அரிசி ஆலை அருகே 100 பேர் அமரக்கூடிய ஒரு சத்திரம் அவர் புகழ் பாடிக்கொண்டிருக்கிறது.
கோடீஸ்வரர் கோயிலில் ஜமீன்தார்கள் தானமளித்த பொன்னும் பொருளும் ஏராளமாக இருந்ததனால் அவற்றைப் பாதுகாக்க படை வீரர்களைக் கோயிலை சுற்றி நிறுத்தினர்.ஊர்க்காடு சிவாலயத்தில் பரிவேட்டை நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாக்களை ஜமீன்தார்கள் முன்னின்று நடத்துவார்கள். கோடீஸ்வரர் ஆலயத்திலிருந்து புறப்பட்டு அம்பாசமுத்திரம் வண்டிமறிச்சம்மன் கோயில் அருகே சந்தைக்கு மேல்புறம் சென்று பரிவேட்டையாடுவார். அதன்பின் இரவு 9 மணிக்கு அவர் கோயிலுக்குத் திரும்புவார். ஜமீன்தார் காலத்தில் மாதம் ஒருமுறை கோடீஸ்வரர் குதிரையில் பரிவேட்டை செல்வது வழக்கமாக இருந்தது.
சாமி கிளம்புவதற்கு முன்னால் ‘தீட்டு கழிப்ப’தற்காக சாமி சப்பரத்திற்கு முன்னால் சிறு சப்பரம் வரும். இதை ‘சிவில் வாகனம்’ என்று கூறுவார்கள். இந்த வாகனத்தை பக்தர்கள் பக்தி மிளிரத் தோளில் சுமந்து வருவார்கள். திருவிழாவின்போது இந்த வாகனத்தை நாம் ரத வீதியில் பார்க்கலாம். வைகாசி விசாகம், மாசி திருவிழா, திருக்கல்யாணம் என விழாக்கள் குறைவில்லாமல் நடைபெற்றன. தற்போது பொதுமக்கள் இவ்விழாக்களை சிறப்பு குன்றாமல் நடத்திவருகிறார்கள். இதற்கு ஜமீன்தார்கள் எழுதி வைத்த நன்கொடைகள் பெரிதும் உதவுகின்றன.
ஊர்க்காடு ஜமீனுக்கும் சுடலைக்கும் கூட ஒரு சம்பந்தம் உள்ளது. கேரளத்தின் தீய மந்திரவாதி பெரும்புலையனை வதம் செய்ய வந்த சுடலை மாடன் அவனை நேருக்கு நேர் சந்தித்தார். இருவரும் தத்தமது பலத்தை நிரூபிக்கும் வழியாக, ஒரு நாழிகை நேரம் ஒரு சிமிழுக்குள் தான் அடைந்துகிடப்பதாக சவால் விட்ட சுடலை அவ்வாறே செய்ய, அந்தச் சிமிழை புலையன் தாமிரபரணி ஆற்றில் தூக்கிப் போட்டான்.
ஊர்க்காடு அருகே தாமிரபரணி ஆற்றில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட அந்தக் கண்ணாடி சிமிழ், கண்ணாடி சோலை என்னும் அரண்மனை தோட்டத்தில் ஒதுங்கியது. அப்போது ஊர்க்காடு ஜமீனாக இருந்த கோட்டிலிங்க சேதுராயரும், சிவன்அனந்தபெருமாள் சேதுராயரும் ஆற்றில் நீராடி கரையேறினர். அவர்கள் கண்களில் அந்தச் சிமிழ் பட்டது. அதை எடுத்தபோது அது வெடித்தது. உள்ளிருந்து சுடலை தோன்றினார். “நான் சுடலைமாடன். என்னை இவ்விடத்தில் நிலையம் போட்டு வணங்கு” என்று கூறினார்.
அதிலிருந்து சுடலைக்குக் கோயில் எழுப்பி வணங்க ஆரம்பித்தனர் ஜமீன்தார்கள். திருவிழாவின் போது ஜமீன்தார்களே கொடை விழாவை முன்வந்து நடத்துவார்கள். அவர்கள் காலம் முடியும்வரை ஜமீன் காவலாளிகளுக்கு வெட்டும் கிடாயில் பங்கு சென்று கொண்டிருந்தது என்கிறார், கோயில் சாமியாடி பேச்சிமுத்து தேவர். இந்தக் கோயிலிலிருந்து பாசத்துடன் பிடிமண் எடுத்து சென்றவர்கள் தங்கள் ஊரில் ஊர்க்காடு சுடலை, ஊய்க்காட்டான், ஊய்க்காட்டு சுடலை என்ற பெயரில் பல ஊர்களில் வணங்கி வருகிறார்கள்.
ஊர்க்காடு அரண்மனைக்கு 14 கண்ணார் வயல்காடுகள் உண்டு. கண்ணார் என்றால் குறு வாய்க்கால். அரண்மனை சாப்பாட்டு வகைக்கு 30 ஏக்கர் கொண்ட மூட்டி கண்ணார் நெல்லை பயன்படுத்த வேண்டும்; கோவில் சம்பள வகைக்கு 250 ஏக்கர் நிலம் விருத்தி குண்டுபள்ளம் என்ற நாய்க்குட்டி ஓடை விளைநிலமும் பயன்பட வேண்டும் என்று வரையறைப்படுத்தியிருந்தனர். சென்னையில் ராணி வசித்தபோது வடபழனி முருகன் மீது பெரும் பக்தி கொண்டிருந்த லிங்க காந்திமதி நாச்சியார் என்ற எல்.கே.ராணி தன் வாரிசாக முருகப்பெருமானையே நினைத்தார்.
எனவே தனக்குச் சொந்தமான ஊர்க்காடு ஜமீனை சேர்ந்த பல நிலங்களை வடபழனி முருகன் கோயிலுக்கு எழுதி வைத்துள்ளார். இக்கோயிலில் ‘பரிதாபி ஆண்டு (1894) வைகாசி மாதம் 12ம் நாள் ஸ்ரீவள்ளி-தேவசேனா சமேத முருகன் மற்றும் ஸ்ரீகுழந்தை முத்துகுமார சுவாமி திருஉருவங்களை நிர்மாணித்தார். ‘மறைந்த என் அருமைத் தந்தை ராஜா திரு மீனாட்சி சுந்தர விநாயக விசாகப்பெருமாள் சேதுராய சேத்திரபதி நினைவாகவும், என் அன்புத் தாயார் ஸ்ரீராணி சுப்பு லெட்சுமி நாச்சியார் அவர்களின் ஞாபகார்த்த மாகவும்’ என்று எழுதி வைத்திருக்கிறார்.
ஊர்க்காடு கோடீஸ்வரர் ஆலயத்துக்குச் சொந்தமான நிறைய நகைகள் ஜமீனின் பாதுகாப்பில் இருந்தன. 1967ல் தமிழக அரசு அறநிலையத்துறையிடம் கோயில்களை ஒப்படைத்த பின்பு இக்கோயில் நகைகள் எல்லாம் நவநீத கிருஷ்ண கோயிலின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன. சிலம்பு விளையாட்டை ஊர்க்காடு ஜமீன்தார்கள் மிகவும் விரும்பினார்கள். அந்த வீர விளையாட்டை கோயில் திருவிழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக வைத்தார்கள்.
ஊர்க்காடு முப்பிடாதி அம்மன் கோயில் தசரா 10ம் நாள் திருவிழாவில் ஊர்க்காடு ஜமீன் அரண்மனையிலிருந்து அம்பாசமுத்திரம் ரயில் நிலையம்வரை சிலம்பு விளையாடியபடியே செல்வார்கள். இதைக்காண சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தெல்லாம் மக்கள் வந்து குழுமுவார்கள். சிறு தெய்வ வழிபாட்டையும் ஊர்க்காட்டு ஜமீன்தார்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக பலகோயில்கள் இங்குள்ளன.1825ல் உடையாத்தேவர் என்ற விஜயகுருநாத ராமநாத சேதுபதியின் ஆட்சி. இவர் குறுநில மன்னராக இருந்த போது சக்கரைகோட்டை கண்மாய் என்ற கிராமத்தில் சிவசாமித்தேவர் முதலான ஏழு சகோதரர்கள், மாடத்தி என்ற ஒரே தங்கையுடன் வசித்து வந்தனர். செல்வ செழிப்பாக இருந்த ராமநாதபுரத்தில் திடீரென்று பஞ்சம் தலைவிரித்தாடியது. ஒரு வேளை சோறுகூட கிடைக்காமல் மக்கள் கஷ்டப்பட்டார்கள். ஏழு அண்ணன்மார் குடும்பத்துக்கும் இதே பிரச்னை. வேறுவழியில்லாமல் திருட்டில் ஈடுபட்டனர்.
சேதுபதிராஜா அவர்களைக் கைது செய்து நாடுகடத்தினார். ஊர்க்காட்டு ஜமீன்தார் பராமரிப்பிலிருந்த சிவன் கோயிலில் நகைகள் நிறைய இருப்பதைக் கேள்விப்பட்டு அதைக் கொள்ளையடிக்க கோயிலுக்குள் நுழைந்தனர். ஆனால் ஊர்க்காடு காவலாளிகள் அவர்கள் நடவடிக்கையை கவனித்துவிட, இரு தரப்புக்கும் சண்டை மூண்டது. சகோதரர்களில் மூத்தவரான சிவசாமித்தேவர் கழுத்தில் வெட்டுபட்டு மாண்டார். உடனே அங்கிருந்து தப்பியோடிய பிற சகோதரர்களும் ஒருவரை அடுத்து மற்றவர் என்று கொல்லப்பட்டனர்.
சகோதரர்கள் மாண்டதை அறிந்த மாடத்தி நாக்கை பிடிங்கி கொண்டு அவளும் உயிரை விட்டு விட்டாள். ஆனால் இவ்வாறு இறந்த அந்த ஆத்மாக்கள் அமைதியடையவில்லை. அமானுஷ்யமாகக் கொள்ளையடித்து அவற்றை ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார்கள். இதனால் ஊர்க்காடு ஜமீனில் பல பிரச்னைகள் ஏற்பட்டன. பலவகை நோய்கள் மக்களைத் தாக்கின. பீதியடைந்த மக்கள் ஜமீனிடம் முறையிட்டனர்.
நோய்க்கான காரணத்தை சேரன்மகாதேவி சென்று ஒரு குறத்தியிடம் குறி கேட்டனர். அந்த குறியில் ஏழு சகோதரர்களும் ஒரு சகோதரியும் தோன்றி, “எங்களுக்கு நிலையம் தாருங்கள். பூடம் போட்டு வணங்குங்கள். உங்களை நல்லபடி வைத்து காத்துக்கொள்கிறேன்” என்று வாக்களித்தனர். அதன்படி ஊர்க்காடு ஊரை சுற்றி அவர்களுக்குத் தனித்தனியாக கோயில் வைத்து வணங்கினார் ஜமீன்தார். தற்போது ஊர்க்காடு மக்களின் காவல் தெய்வமாக இவர்கள் விளங்குகிறார்கள்.
கோட்டிலிங்க சேதுராயரின் இரண்டாவது மகன் மீனாட்சி சுந்தர விநாயக விசாகப் பெருமான் சேதுராயர். இவருக்கு ஆண் வாரிசு இல்லாததால் எல்.கே.ராணி பட்டத்துக்கு வந்தார். இவரது தம்பி, ராஜா உலகாளும் பெருமாள் சேதுராயர். இவருக்கு ராமநாதபுரம் ராணி மீனாட்சி சுந்தர நாச்சியாரை மணம் முடித்தனர். இவரது வாரிசு, ஸ்ரீதர் சேதுராயர். இவர் தற்போது ஆலயங்கள் பராமரிப்புக்கு மிகவும் உதவி வருகிறார்.
ஊர்க்காடு ஜமீன்தார் நிலங்கள் வழங்கியதாலும், அவர்களது வாரிசுகள் கோடீஸ்வரர் கோயிலுக்கு திருப்பணிக்குப் பெருமளவு உதவிய காரணத்தினாலும், தற்போது பொதுமக்கள் உதவியுடன் இக்கோயில் கும்பாபிஷேகம் கண்டு புதுப்பொலிவுடன் திகழ்கிறது. (ஜமீன்தார்களின் ஆலயங்களைத் தேடும் பணி சவால் மிக்கதாகவே அமைந்தது. பல இடங்களில் கோயிலுக்கும் ஜமீன்தாருக்கும் உள்ள உறவை சொல்லக்கூட ஆள் இல்லை. கல்வெட்டுகளும் முழுமையான தகவலைத் தரவில்லை. மறைந்த ஜமீன்களில் மறைக்கப்பட்ட வரலாறுகளை தோண்டி எடுக்க இயலாமல் பலநேரம் திணறினாலும், கிடைத்த தகவலை சிறப்புடன் சமர்ப்பித்துவிட்ட ஆத்ம திருப்தியில் விடைபெற்றுக் கொள்கிறோம்.)
ஊர்க்காடு ஜமீன்தார் நிலங்கள் வழங்கியதாலும், அவர்களது வாரிசுகள் கோடீஸ்வரர் கோயிலுக்கு திருப்பணிக்குப் பெருமளவு உதவிய காரணத்தினாலும், தற்போது பொதுமக்கள் உதவியுடன் இக்கோயில் கும்பாபிஷேகம் கண்டு புதுப்பொலிவுடன் திகழ்கிறது. (ஜமீன்தார்களின் ஆலயங்களைத் தேடும் பணி சவால் மிக்கதாகவே அமைந்தது. பல இடங்களில் கோயிலுக்கும் ஜமீன்தாருக்கும் உள்ள உறவை சொல்லக்கூட ஆள் இல்லை. கல்வெட்டுகளும் முழுமையான தகவலைத் தரவில்லை. மறைந்த ஜமீன்களில் மறைக்கப்பட்ட வரலாறுகளை தோண்டி எடுக்க இயலாமல் பலநேரம் திணறினாலும், கிடைத்த தகவலை சிறப்புடன் சமர்ப்பித்துவிட்ட ஆத்ம திருப்தியில் விடைபெற்றுக் கொள்கிறோம்.)
நன்றி:தினகரன் நாளிதழ்
படங்கள் உதவி : செம்பியன் அரசன்,The Zamin's of TamilNadu (Ramesh Manoharan),shaivam.org









